Wednesday, September 24, 2008

இதயத்தை திருடியவன் ஹிதேந்திரன்

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளேயே அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. பால் மணம் மாறாத 16 வயதினிலே ஹிதேந்திரன் விட்டுச்சென்ற இதயம் இந்த நேரம் ஒரு குழந்தையின் நெஞ்சுக்குழிக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். இந்த செய்தியை தினகரன் நாளிதழில் படித்தபோது நெஞ்சம் கொஞ்சம் கணத்துப்போனது.

இந்த நேரத்தில் எல்லோருடைய இதயத்தையும் கொள்ளை கொண்டவர்கள் ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி தான். ஒரு தாய் எப்போது மகிழ்ச்சி அடைவாள் என்றால்... பிறர் தன் மகனை சான்றோன் என்று கூறும் போது தான். ஆனால் இந்த கலி காலத்தில் சான்றோன் என்ற சொல்லே கடலில் கரைத்த பெருங்காயமாய் மறைந்து போனது. இப்போது வாழும் போது பிறர்க்கு உதவி செய்யும் மகான்களை விட சாகும் போதும் இந்த உலகிற்கு எதையாவது விட்டுச்செல்லும் மனதர்கள் மேலானவர்கள்.

உதவி என்பது எல்லா காலத்திலும் எல்லாராலும் செய்யமுடியாது. அதைவிட இதயத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. குறிப்பாக சராசரி மனிதர்கள் மரணப்படுக்கையில் தன் உறவினர் இருந்தாலும் கூட அவரை கடைசி நிமிடம் வரை பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஹிதேந்திரனின் பெற்றோர் தன் மகன் மூளை செயல் இழந்து விட்ட நிலையில் இன்னொரு உடலில் அவன் இதயமாவது துடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களே.... அவர்களை போன்ற மனிதர்கள் ஊருக்கு நாலு பேராவது வேண்டும். சிறுநீரகங்கள்.... கண்கள், நுரையீரல், கல்லீரல் என அத்தனை உடலுறுப்புகளையும் பிறருக்கு வழங்கியது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பகவத்கீதையை நம்புகிறோமோ இல்லையோ அதில் கூறப்பட்ட வாசகம் உண்மையானது. எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு? இழப்புக்கள் ஒரு புறம் இருந்தாலும் எதையாவது விட்டுச்செல்வோம். ஹித்தேந்திரனை போல இதயத்தை கொடுக்க முடியாவிட்டாலும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முன்வருவோம். அது இறப்பிற்கு உங்களை உலகத்தை பார்க்க வைக்கும். ஒரு சொட்டு குருதியை பிறருக்கு அளித்தாலும் உங்கள் ரத்தம் ஓடும் மனிதர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் வாழ்த்துவார்கள்.

இருக்கும் போது
ரத்த தானம் செய்வோம்
இறந்த பின்
உடல்தானம் செய்வோம்
nellaitamil

No comments: