Saturday, May 16, 2009

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் சூறை


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாரதிராஜாவின் அலுவலகத்தை நேற்று இரவு மர்ம கும்பல் தாக்கி பெரும் சேதம் ஏற்படுத்தியது.

இதையடு்தது திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், சீமான் வீடுகளுக்கு பாதுக்காப்பு அளிக்க தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ஜெமினி பார்சன் வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் சினிமா எடிட்டிங் மற்றும் டப்பிங் ஸ்டுடியோவில் நேற்று இரவு 8 மணிக்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பலினர் நுழைந்து அங்குள்ள அறைகளை அடித்து நொறுக்கினார்கள்.

சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்த பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், ஆபீஸ் பையன் ராம்கி ஆகியோர் ஓடிவந்தனர்.

அவர்களை தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மிரட்டியது. இதனால் அவர்கள் ஒதுங்கி நின்றுகொண்டனர்.

இது தொடர்பாக துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அங்கு வந்த இயக்குநர் சுந்தரராஜன், இந்த தாக்குதல் குறித்த தனது அதிர்ச்சியைத் தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

சோனியாகாந்தி சென்னை வரும்போது இயக்குநர் பாரதிராஜாவும், நானும் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம். ஈழத் தமிழரைக் காக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கடந்த ஒருமாதமாக பிரச்சாரம் செய்தோம்.அதன் விளைவுதான் இது. அடுத்து என் வீடும், சீமான் வீடும், ஆர்.கே.செல்வமணி வீடும் தாக்கப்படலாம் என்றார்.

இதையடுத்து இயக்குநர்கள் சீமான், சுந்தரராஜன் மற்றும் செல்வமணி வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணை கமிஷனர் மௌரியா தெரிவித்தார்.

2 comments:

யட்சன்... said...

வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று...

அரசு ஈழ ஆதரவாளர்களுக்குறிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்.

ers said...

நீங்கள் சொல்வது சரிதான்.