Friday, April 24, 2009

நான் உங்களில் ஒருவன்.

நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். இணையம் நடத்தினால் இவர் தான் நடத்துகிறார் என்று காட்டிக்கொள்ளாமலேயே சிலர் இருக்கலாம். அந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இணையமும் நண்பர்களையும் நான் ஒன்றாக பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் ஏனோ தெரியவில்லை எனக்கு நண்பர்கள் கொஞ்சம் குறைவு தான். அப்படியே இருக்கும் நண்பர்களுக்கும் பிளாக் எழுதுவது தெரியாது. விட்டால் மெயில் பார்ப்பார்கள்.... பதில் போடுவார்கள் அவ்வளவு தான். ஆனாலும் இணையத்தின் வாயிலாக சிலரை பகைத்துக்கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது.

இணைய அரசியல் தெரியாத காலகட்டத்தில் புதிய பதிவர்கள் என்று எனது வருத்தத்தை வெளிப்படுத்தியது தான் தாமதம். நான் இந்த பதிவர் களத்தில் இருந்தே தூக்கி வீசப்பட்டதாகவே கருதுகிறேன்.

ஆனாலும் சிலர் என் பதிவுகளில் ஆபாசம் இருப்பதாக சுட்டிக்காட்டிய வேளைகளில் தவறுகளை திருத்திக்கொண்டேன். ஆபாசம் என்ற வார்த்தை சினிமா என்கிற வேலிக்குள் ஒளிந்து கிடக்கிறது என்பது சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

"என்ன சார் சினிமா பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்றீங்க... இதுக்கு நூறு பேர் இருக்காங்க... உங்க திறமை என்னவோ அதை காட்டுங்க... அதை விட்டுட்டு இதென்ன கோமாளித்தனம்... என்று நேரடியாக கேட்டவர்கள் நிறைய பேர். ஆனாலும் சிலர் சில வக்கரமான தலைப்புக்களை சுட்டிக்காட்டினர். இதில் குறிப்பாக கிரி... வால்பையன் உள்ளிட்டவர்களும் தமிழ் 2000 என்ற தலைப்பில் எழுதியவரும் அடக்கம்.

இந்த பாதிப்புகளுக்கு பிறகு சரிவர இணைய பக்கங்களை பார்ப்பதோடு சரி... இனி எழுத வேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தேன். குறிப்பாக தமிழ்மணம்... தமிழிஷ் உள்ளிட்ட தளங்களில் இணைப்பதும் இல்லை.

இப்போது நான் மீண்டும் எழுதுவது கொஞ்சம் ஆரோக்கியமான விஷயங்களாக இருக்கட்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பயணத்தை தொடங்குகிறேன். அதைத்தவிர்த்து, நெல்லைத்தமிழ் இணையத்தை நடத்திக்கொண்டு நான் எழுதுவதால் எந்த பாதிப்பும் வந்துவிட போவதில்லை. என் மோசமான எழுத்துக்களை கூட இது நாள் வரையில் எத்தனையோ பேர் படித்திருக்கிறார்கள்.

இப்போது உருப்படியாய் எழுதலாம் என நினைக்கிறேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு...


மோகன்
நெல்லைத்தமிழ் இணையம்
திருநெல்வேலி.

No comments: