Friday, April 17, 2009

விருதுநகரில் கார்த்திக்.... - வைகோவை தோற்கடிக்க திமுக தீவிரம் !


சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் கைகோர்த்து புதுக்கூட்டணியில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக். அவர் விருதுநகர் தொகுதியில் களமிறங்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில்,''வைகோவுக்கு ஆதரவான முக்குலத்தோர் ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகவே கார்த்திக்கைத் துருப்புச் சீட்டாக விருதுநகரில் இறக்குகிறது திமுக !'' என்று போட்டு உடைக்கிறார்கள் ஃபார்வர்டு பிளாக்கிலுள்ள கார்த்திக்கின் முன்னாள் தோழர்கள். அவர்களிடம் பேசினோம்.

'' கார்த்திக் அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து பார்த்தீர்களானால்.. அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவுக்குச் சாதகமானதாக இருக்கும். அதேபோல்தான் இம்முறையும் திமுகவிடம் சரண்டர் ஆகியிருக்கிறார். இந்தத் தேர்தலோடு வைகோவுக்கு முடிவுரை எழுதத் தீர்மானித்துவிட்ட திமுக, அவருடைய கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்மூலமாக்கும் வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறது. அந்த சங்கடங்களையெல்லாம் சமாளித்து தனக்குத் தேவையான நான்கு ஸீட்களை அதிமுகவிடம் ஏகத்துக்கும் போராடிப் பெற்றிருக்கிறார் வைகோ. ஆனால், ''இந்த நான்கில் ஒரு இடத்தில் கூட மதிமுக ஜெயிக்கக் கூடாது'' என்று தன் கட்சியின் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கருணாநிதி பகிரங்கமாகவே உத்தரவு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக வைகோவைத் தோற்கடிக்க அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தங்கம் தென்னரசுக்கும் ஸ்பெஷல் அசைன்மென்ட்டே கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதேநேரம் ஸ்டார் வேட்பாளரான வைகோவைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று தெரிந்துதான் கார்த்திக்கை கொம்பு சீவுகிறார்கள்.

கார்த்திக்கின் ''சரணாலயம்'' அமைப்புக்கு விருதுநகர் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டுத்தான் அவர் அரசியலுக்கே வருகிறார். அங்கே அவரை ஆதரிக்கிற முக்குலத்தோரில் பெருவாரியானவர்கள் என்பது கணிப்பு. தேமுதிக வேட்பாளரான ''மாஃபா'' பாண்டியராஜன், நாடார் இனத்தவராக இருப்பதால், காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டிய நாடார் ஓட்டுக்களையும், வைகோவுக்கு விழ வேண்டிய நாயுடு இனத்தவரின் ஓட்டுக்களையும் கணிசமாகப் பிரித்து விடுவார். விருதுநகரில் கார்த்திக் நின்றால், முக்குலத்தோரின் ஓட்டுக்களையும் வைகோவுக்குப் போகவிடாமல் தடுத்து, அவரை ''ஓட்டாண்டி''ஆக்கலாம் என்பதுதான் திமுகவின் கணக்கு. இது சம்பந்தமாக திமுக தரப்பிலிருந்து கார்த்திக்கு தூது விட்டிருக்கிறார்கள். கடந்த இருபது நாட்களுக்கு முன்பு இது விஷயமாகப் பேசுவதற்கு கோபாலபுரத்துக்குப் புறப்பட்டிருக்கிறார் கார்த்திக். ஆனால், இது மீடியாக்களுக்குத் தெரிந்தால் சிக்கலாகி விடும் என்பதால், கட்சியின் ஒரு முக்கியப் பிரமுகரின் பெயரைக் குறிப்பிட்டு, ''அவரைப்போய் பாருங்கள். தேவையானதைச் செய்து கொடுப்பார்கள்...'' என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இதன்பிறகு கார்த்திக் விருதுநகரில் களமிறங்குவது வேகப்படுத்தப்பட்டிருக்கிறது..'' என்றவர்கள்.

''எப்படி பார்த்தாலும் விருதுநகர் தொகுதியில் கார்த்திக்கால் அறுபதிலிருந்து எழுபதாயிரம் ஓட்டுக்களையாவது பிரிக்க முடியும் என்பதால், வைகோவின் வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல...''என்கிறார்கள். கார்த்திக் விசுவாசிகளைக் கேட்டால்,''எங்கள் தலைவர் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவது என்ற இலக்கோடுதான் நிற்பாரே ஒழிய, திமுகவின் கைப்பாவையாக எல்லாம் களத்தில் இறங்கி இமேஜை (?) கெடுத்துக் கொள்ள மாட்டார் !'' என்கிறார்கள்.

சரியாப்போச்சு !

நன்றி
ஜுனியர் விகடன்

No comments: