நல்ல சினிமாக்களை மட்டுமே காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். மற்ற சினிமாக்களை எப்படியாவது எப்போதாவது பார்க்க நேரிடலாம் அது தனிக்கதை.
வெயில் படத்தை ராஜபாளையத்தில் பார்த்து விட்டு வரும்போது, வலிக்கும் மனதுடன் தான் வெளியே வந்தேன். அந்த படத்தின் இறுதியில் தனது மூத்த மகனுக்காக நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் ஒரு சராசரி தகப்பனை இன்னமும் கூட நான் மறக்கவில்லை.
மனதோடு பேசும் படங்கள் எப்போதாவது தான் தமிழ் திரைக்கு வருகிறது. அந்த வரிசையில் என்னை கொள்ளை கொண்ட படம் அங்காடி தெரு. ரங்கநாதன் தெருவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனென்றால் சென்னையில் ரங்கநாதன் தெருவை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அடிமை வேலை என்றால் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 10வது படித்துக்கொண்டிருக்கும் போது மும்பைக்கு 500 ரூபாயோடு சம்பாதிக்கும் கனவோடு திருநெல்வேலியில் இருந்து பயணத்தவன் நான். வள்ளியூர் பக்கம் உள்ள நாடார் ஒருவரின் கடையில் வேலை செய்து அவர் படுத்திய பாட்டை நான் சொல்லி மாளாது. வீட்டிலும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் வந்து அகப்பட்டு கொண்டவர்களை கசக்கி பிழியும் ஒரு கொடூரராகத்தான் அவர் தெரிந்தார்.
நாள் முழுக்க பீடா கடையில் வேலை... காலையில் 4.30க்கு கடைவிரிப்பார்கள். மும்பை சர்ச் கேட் பகுதியில் அதிகாலையிலேயை அலுவலக நேரம் மாதிரி கூட்டம் இருக்கும். பெருநகரத்தின் சலசலப்புக்கள், இரவின் நிசப்தத்தை அப்போது தான் குலைத்துக்கொண்டிருக்கும்.
இரவில் தூங்குவதற்கு நிச்சயமாய் 1 மணிக்கு மேலாகலாம். அதில் வேறு கொடுமை என்னவேன்றால் நான் அகப்பட்டுக்கொண்ட நேரத்தில் வடகிழக்கு பருவ மழை வேறு தன் குரூரத்தை காட்டிக்கொண்டிருக்கும். இரண்டு பீடாக்கடைகளை ஒருசேர்த்து கட்டி அதன் மேல் சின்னதாய் தார்பாயில் ஒரு கூடாரம் மாதிரி அமைத்துக்கொண்டு படுக்க வேண்டும். மழையில் எங்கிருந்தோ, தொபு... தொபுவென்று தண்ணீர் மூஞ்சியில் வந்து விழும், அப்போது தான் தெரியும் மழையின் கோரதாண்டம் பற்றி.
மழை 5 வது வகுப்பு படிக்கும் வரையிலும் எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், மும்பையில் இருக்கும் வரையில் மழையை பார்த்தாலை கிலி எடுக்கும். கால் கடுக்க வெற்றிலையில் ஏதோ சில கருமாந்திரங்களை தடவிக்கொடுக்க சொல்லுவான் அந்த முதலாளி. நானும் ஆய்க்குடி அருகே இருந்து என்னோடு ஓடி வந்த அந்த நண்பனும் வேலையை செய்து கொண்டிருப்போம்.
அப்போது, சிகரெட் என்ன விலை என்று கூட எனக்கு தெரியாது. பள்ளிக்கூடம் படிக்கும் போது, 1.50 காசிற்கு விற்ற கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் ரேட் மட்டும் தான் பரீட்சயமானது. ஏனென்றால், திருட்டு தம் கொடுத்த அனுபவத்தால் வந்தது. ஆனால் கிராமங்களை போல் இல்லாமல் அங்கோ, விதவிதமாய் சிகரெட்டுக்கள், lights, banama filter... பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவைகளின் விலைகள் கூட சரி வர புரிந்து கொள்ள முடியால் போனது. இதற்காக கூட அவரின் வார்த்தை கணைகளை வாங்கி குவித்திருக்கிறேன் பலமுறை.
3 பை 1 டீயை வாங்கி கொடுத்து மத்தியான சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாமல் செய்திருக்கிறார். 4 மணிக்கு மேல் அவர்கள் வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை தொண்டைக்குழிக்குள் இறக்குவதே கடினம். காலையில் இருந்து இரவு வரையில் உட்காருவது என்பதை யோசிக்க கூட முடியாது. இயந்திரத்தனத்துக்கு இடையில் பரபரப்பான அந்த வாழ்க்கையில் அடுத்தவனுக்காக சம்பாதித்து போடுகிறோம் என்ற உணர்வு வந்த போது உடல் நிலை வேறு பாடாய் படுத்தியது. சாக்கடை கொசுக்களுக்கு ஊடாக படுத்து எந்திரிந்ததில் வயிற்றுப்போக்கு, மராட்டிய முரசு பத்திரிகை போடும் பையனுக்கு எங்க ஏரியா, அவன் தான் வீதியில் கிறங்கி விழுந்த என்னை பத்திரமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனான். அவன் செலவழித்த 246 ரூபாயை நான் வரும் வரையில் அவன் திருப்பி வாங்கவில்லை என்பது வேறு கதை.
என்னை வைத்து எவ்வளவு சம்பாதித்திருப்பார் அந்த முதலாளி... ஊருக்கு போவதாய் சொன்னபோது, கணக்கு பார்த்து கரெக்டாய் பணம் கொடுத்து அனுப்பினார்.
சரி அங்காடி தெருவிற்கு வருகிறேன். இந்த படம் எனது பழைய காயங்களுக்கு மருந்து போட்ட உணர்வு. தென்மாவட்ட நடுத்தர குடும்பத்தினரை குறிவைத்து ரத்தம் குடிக்கும் பிசாசுகளாக, நாடார் இனத்தின் தொழிலதிபர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
நாடார் இனத்தை பற்றி அனுபவம் மிக்கவர்கள் சிலர் சொல்லும் போது, தன் இன மக்களை கரம் தூக்கி விடும் பக்குவம் அவர்களிடம் உண்டு என்பதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தஸ்து உயர்ந்ததுதும், இனத்தை பார்ப்பதில்லை.
நாடார் இனத்தில் பத்திரிகை நடத்தும் ஒரு கொடை வள்ளல், அலுவலகத்திற்கு எப்போதாவது வரும் போது, தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் பணத்தை கைவிட்டு எடுத்து எத்தனை ரூபாய் தாள்கள் வந்தாலும் தொழிலாளிக்கு கொடுப்பாராம். இதை பெருமையாய் எனது நண்பன் சொன்னான். நான் கேட்டேன். புரூப்பில் இருந்து செய்தி பிரிவுக்கு வந்திருக்கும் உனக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் உங்கள் முதலாளி? நடந்தே வருகிறாயே அலுவலகத்தில் இருசக்கர வாகனம் வாங்க லோன் போட வேண்டியது தானே... வள்ளல் முதலாளி அள்ளித்தருவாரே.. என்றேன். மூவாயிரம் வாங்கும் நான் லோன் வாங்கினால் அடைப்பது யாராம்... என்றான் நண்பன்.
ரங்கநாதன் தெரு கொத்தடிமை தனம் தான் பத்திரிகை துறையிலும். வளரும் வரையில் முதலாளியின் கண்களுக்கு தொழிலாளி தெரிவான். அப்புறம் முதலாளி சொன்னதாய் செவிவழி செய்திகள் மட்டுமே தொழிலாளிக்கு கேட்கும். தனியார் துறையின் கொத்தடிமை தனங்களுக்கு, பிள்ளைவாழ், பார்ப்பான், நாடார் என்ற சாதி வித்யாசம் என்பது துளியும் இல்லை.
இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பங்கிட்டு கொடுக்க சொல்லி எந்த தொழிலாளியும் கேட்பதில்லை. ஆனாலும் மற்றவர்களை போல தனி மனித சுதந்தரம் ஒன்றை தான் ஒவ்வொரு தொழிலாளியும் விரும்புகிறான்.
எதையாவது செய்து, முதலாளியின் கோபத்திற்கு ஆளாகி வேலையை விட்டே வெளியேறும் தொழிலாளியின் சாபம் ஒன்றும் முதலாளியை ஆண்டி ஆக்கி விட போவதில்லை.
விற்க தெரிந்தவன் வியாபாரி.. எதையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள தெரிந்தவன், துரதிஷ்டம் துரத்தினாலும் என்றாவது முன்னேறுவான்.
நான் பணி புரிந்த பத்திரிகையில் இருந்து வெளியேறிய போது வானம் இருண்டு போனதாய் தெரிந்தது கண்களுக்கு... இப்போது கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு மேல் என்னிடம் தொழில் நுட்ப கருவிகள் இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழவில்லை.
இன்னும் சில வருடங்களில் நானும் ஒரு முதலாளியாகவும் மாறலாம். அப்போது இதே போல ஒரு தொழிலாளியோ... இன்னும் சிலரோ கூட தூற்றி எழுத நேரிடலாம்....
பணம்!
எல்லாவற்றையும் மாற்றும் மந்திர சொல் தானே...
3 comments:
Nidharsanam
நன்றி.
பார்த்தாலே பாவம் என்ற என்ற நிலையிலிருந்து உயர்ன்து இப்ப மற்ற மக்கலை பாவம் ஆக்குகிரார்கல்.
Post a Comment