Friday, April 24, 2009

நான் உங்களில் ஒருவன்.

நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். இணையம் நடத்தினால் இவர் தான் நடத்துகிறார் என்று காட்டிக்கொள்ளாமலேயே சிலர் இருக்கலாம். அந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இணையமும் நண்பர்களையும் நான் ஒன்றாக பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் ஏனோ தெரியவில்லை எனக்கு நண்பர்கள் கொஞ்சம் குறைவு தான். அப்படியே இருக்கும் நண்பர்களுக்கும் பிளாக் எழுதுவது தெரியாது. விட்டால் மெயில் பார்ப்பார்கள்.... பதில் போடுவார்கள் அவ்வளவு தான். ஆனாலும் இணையத்தின் வாயிலாக சிலரை பகைத்துக்கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது.

இணைய அரசியல் தெரியாத காலகட்டத்தில் புதிய பதிவர்கள் என்று எனது வருத்தத்தை வெளிப்படுத்தியது தான் தாமதம். நான் இந்த பதிவர் களத்தில் இருந்தே தூக்கி வீசப்பட்டதாகவே கருதுகிறேன்.

ஆனாலும் சிலர் என் பதிவுகளில் ஆபாசம் இருப்பதாக சுட்டிக்காட்டிய வேளைகளில் தவறுகளை திருத்திக்கொண்டேன். ஆபாசம் என்ற வார்த்தை சினிமா என்கிற வேலிக்குள் ஒளிந்து கிடக்கிறது என்பது சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

"என்ன சார் சினிமா பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்றீங்க... இதுக்கு நூறு பேர் இருக்காங்க... உங்க திறமை என்னவோ அதை காட்டுங்க... அதை விட்டுட்டு இதென்ன கோமாளித்தனம்... என்று நேரடியாக கேட்டவர்கள் நிறைய பேர். ஆனாலும் சிலர் சில வக்கரமான தலைப்புக்களை சுட்டிக்காட்டினர். இதில் குறிப்பாக கிரி... வால்பையன் உள்ளிட்டவர்களும் தமிழ் 2000 என்ற தலைப்பில் எழுதியவரும் அடக்கம்.

இந்த பாதிப்புகளுக்கு பிறகு சரிவர இணைய பக்கங்களை பார்ப்பதோடு சரி... இனி எழுத வேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தேன். குறிப்பாக தமிழ்மணம்... தமிழிஷ் உள்ளிட்ட தளங்களில் இணைப்பதும் இல்லை.

இப்போது நான் மீண்டும் எழுதுவது கொஞ்சம் ஆரோக்கியமான விஷயங்களாக இருக்கட்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பயணத்தை தொடங்குகிறேன். அதைத்தவிர்த்து, நெல்லைத்தமிழ் இணையத்தை நடத்திக்கொண்டு நான் எழுதுவதால் எந்த பாதிப்பும் வந்துவிட போவதில்லை. என் மோசமான எழுத்துக்களை கூட இது நாள் வரையில் எத்தனையோ பேர் படித்திருக்கிறார்கள்.

இப்போது உருப்படியாய் எழுதலாம் என நினைக்கிறேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு...


மோகன்
நெல்லைத்தமிழ் இணையம்
திருநெல்வேலி.

Thursday, April 23, 2009

வால்பையனின் பதிவும் இந்த படமும்


பந்த் என்ன நடந்தது என்பது தொடர்பாக வால்பையன் ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த படம் பந்த் தொடர்பாக கட்சி தொண்டர் ஒருவர் ஈழத்தமிழருக்காக தனது முடியை காணிக்கையாக்கி இருக்கிறார் (சும்மா டமாசு)

அவரது பிரத்யோக படம் இது...

Saturday, April 18, 2009

என்ன கொடுமை சார்? சென்னை அணியில் ஒரே தமிழன்

என்ன கொடுமை சார்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் IPL எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக துவங்கியது. ஆனால் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து மக்களை ஏமாற்றப்போகும் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்கு மொழி அடைப்படையிலான உணர்வுகளை தூண்டும் ஒரு நிலை இருக்கிறது. குறிப்பாக சென்னை அணியை தமிழன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் நிலை இருக்கிறது.

ஆனால்...
தமிழன் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். சென்னை அணியை பொறுத்தவரையில் எத்தனை தமிழன் விளையாடுகிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அணியில் விளையாடும் ஒரே தமிழன் பத்ரிநாத் மட்டும் தான். மற்றவர்கள் அத்தனை பேரும் இந்தியாவின் பிற மாநிலங்களையோ, வேறு நாடுகளையோ சேர்ந்தவர்கள்.

இப்படி இருக்கும் போது சென்னை என்ற பெயரை இவர்கள் உபயோகிப்பதன் நோக்கம்... இன உணர்வுகளை தூண்டி கிரிக்கெட் மூலம் குளிர் காயத்தான். இது போன்ற ஐபிஎல் மூலம் உள்ளூர் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்று ஏதோ ஒரு ஆங்கில பேட்டியில் லலித் மோடி சொன்னதாக எனக்கு நியாபகம் இருக்கிறது.

ஒரே ஒரு வீரர் மட்டும் இதில் விளையாடுவதால் தமிழக கிரிக்கெட் அணி உலக அளவில் எவ்வளவு புகழ் பெற போகிறதோ தெரியவில்லை.

இந்தியாவின் அரசியலை போல... கிரிக்கெட் பெரிய அளவிலான பிசினஸ் என்பதை தமிழன் தெரிந்து கொண்டால் ஐபிஎல் போட்டிகளை வெறி பிடித்தவனை போல பார்க்கமாட்டான்.

Friday, April 17, 2009

விருதுநகரில் கார்த்திக்.... - வைகோவை தோற்கடிக்க திமுக தீவிரம் !


சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் கைகோர்த்து புதுக்கூட்டணியில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக். அவர் விருதுநகர் தொகுதியில் களமிறங்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில்,''வைகோவுக்கு ஆதரவான முக்குலத்தோர் ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகவே கார்த்திக்கைத் துருப்புச் சீட்டாக விருதுநகரில் இறக்குகிறது திமுக !'' என்று போட்டு உடைக்கிறார்கள் ஃபார்வர்டு பிளாக்கிலுள்ள கார்த்திக்கின் முன்னாள் தோழர்கள். அவர்களிடம் பேசினோம்.

'' கார்த்திக் அரசியலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து பார்த்தீர்களானால்.. அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவுக்குச் சாதகமானதாக இருக்கும். அதேபோல்தான் இம்முறையும் திமுகவிடம் சரண்டர் ஆகியிருக்கிறார். இந்தத் தேர்தலோடு வைகோவுக்கு முடிவுரை எழுதத் தீர்மானித்துவிட்ட திமுக, அவருடைய கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்மூலமாக்கும் வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறது. அந்த சங்கடங்களையெல்லாம் சமாளித்து தனக்குத் தேவையான நான்கு ஸீட்களை அதிமுகவிடம் ஏகத்துக்கும் போராடிப் பெற்றிருக்கிறார் வைகோ. ஆனால், ''இந்த நான்கில் ஒரு இடத்தில் கூட மதிமுக ஜெயிக்கக் கூடாது'' என்று தன் கட்சியின் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கருணாநிதி பகிரங்கமாகவே உத்தரவு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக வைகோவைத் தோற்கடிக்க அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தங்கம் தென்னரசுக்கும் ஸ்பெஷல் அசைன்மென்ட்டே கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதேநேரம் ஸ்டார் வேட்பாளரான வைகோவைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று தெரிந்துதான் கார்த்திக்கை கொம்பு சீவுகிறார்கள்.

கார்த்திக்கின் ''சரணாலயம்'' அமைப்புக்கு விருதுநகர் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டுத்தான் அவர் அரசியலுக்கே வருகிறார். அங்கே அவரை ஆதரிக்கிற முக்குலத்தோரில் பெருவாரியானவர்கள் என்பது கணிப்பு. தேமுதிக வேட்பாளரான ''மாஃபா'' பாண்டியராஜன், நாடார் இனத்தவராக இருப்பதால், காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டிய நாடார் ஓட்டுக்களையும், வைகோவுக்கு விழ வேண்டிய நாயுடு இனத்தவரின் ஓட்டுக்களையும் கணிசமாகப் பிரித்து விடுவார். விருதுநகரில் கார்த்திக் நின்றால், முக்குலத்தோரின் ஓட்டுக்களையும் வைகோவுக்குப் போகவிடாமல் தடுத்து, அவரை ''ஓட்டாண்டி''ஆக்கலாம் என்பதுதான் திமுகவின் கணக்கு. இது சம்பந்தமாக திமுக தரப்பிலிருந்து கார்த்திக்கு தூது விட்டிருக்கிறார்கள். கடந்த இருபது நாட்களுக்கு முன்பு இது விஷயமாகப் பேசுவதற்கு கோபாலபுரத்துக்குப் புறப்பட்டிருக்கிறார் கார்த்திக். ஆனால், இது மீடியாக்களுக்குத் தெரிந்தால் சிக்கலாகி விடும் என்பதால், கட்சியின் ஒரு முக்கியப் பிரமுகரின் பெயரைக் குறிப்பிட்டு, ''அவரைப்போய் பாருங்கள். தேவையானதைச் செய்து கொடுப்பார்கள்...'' என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இதன்பிறகு கார்த்திக் விருதுநகரில் களமிறங்குவது வேகப்படுத்தப்பட்டிருக்கிறது..'' என்றவர்கள்.

''எப்படி பார்த்தாலும் விருதுநகர் தொகுதியில் கார்த்திக்கால் அறுபதிலிருந்து எழுபதாயிரம் ஓட்டுக்களையாவது பிரிக்க முடியும் என்பதால், வைகோவின் வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல...''என்கிறார்கள். கார்த்திக் விசுவாசிகளைக் கேட்டால்,''எங்கள் தலைவர் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவது என்ற இலக்கோடுதான் நிற்பாரே ஒழிய, திமுகவின் கைப்பாவையாக எல்லாம் களத்தில் இறங்கி இமேஜை (?) கெடுத்துக் கொள்ள மாட்டார் !'' என்கிறார்கள்.

சரியாப்போச்சு !

நன்றி
ஜுனியர் விகடன்

இது சுதந்திரமா

கண்களை
மூடும் போதெல்லாம்
கனவுகள்
விழித்துக்கொள்கிறது


இதயத்தின்
ஜன்னல்
திறந்திருந்தும்
காற்று வரவில்லை


சிந்தனைகள்
சிறைபட்டும் கூட
உன் நினைவுகள்
சுற்றி வருகிறது


நடைபிணமானலும்
காதல் மட்டும்
சுதந்திரமாய்
என்னை தழுவுகிறது