Thursday, April 15, 2010

மனிதாபிமானம் - ஓட்டுனர் - உயிர்வலி - புத்தாண்டு சோகம்

மனிதாபிமானம் முற்றிலுமாய் செத்துப்போய் விட்டது என்பதற்கு புத்தாண்டு தினமான நேற்று, என் வாழ்வியல் நிகழ்வுகள் படிப்பினை ஏற்படுத்தி சென்று விட்டன.

சொல்ல முடியாத சோகம்...
திமிறி வரும் கோபம்...
நாலு பேரையாவது முகத்தில் அறைய நினைக்கும் ரெளத்திரம்....

இதெல்லாம் நேற்றைய நாளின் குறிப்புகளாக என் டைரியில் பதிந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் நாளில் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானையை தரிசிக்கும் நோக்கத்தில் பழைய சைக்கிளில் சென்ற எனது தந்தை மீது வாகனம் ஒன்று மோதி விட்டது. உணர்விழந்த நிலையில் என் தந்தை நடுரோட்டில் விழுந்து கிடைக்கிறார். என் நிறுவனம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததால் நில நொடிகளில் எனக்கு தகவல் வந்தது.

அரக்கப்பரக்க ஓடினேன். அழுவதை தவிர எதையும் உருப்படியாய் யோசிக்க திரணியற்று போனேன். அந்த கோலத்தில் அப்பாவை பார்த்து கதறினேன். சில நிமிடங்களிலேயே, அழுவது கோழைத்தனம்... அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற எண்ணம் எனது ஆறாவது அறிவுக்கு பட்டது. சில நிமிடங்களை இப்படி தொலைத்து விட்டோமே... என்ற கோபம் கூட என் மேல் வந்தது.

சம்பவம் நிகழ்ந்த இடம் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள வாடகை வாகனங்கள் நிறுத்துமிடம் என்பதால், உதவிக்கு வாடகை வேன் ஓட்டுனர்களை அழைத்தேன். என் அப்பாவை தூக்க கூட ஒருவரும் வரவில்லை. வாகனத்தில் என் அப்பாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று அவர்களை கைசைத்து கைகூப்பி கூப்பிட்டும் பலனற்று போனது.

அப்போது வந்த கோபம், சோகத்துக்கு மத்தியில்.... கூட்டுக்குள் தன் உடலை உள்ளிழுத்து கொள்ளும் நத்தையை போல வெளிப்படாமல் போனது. யோசிக்க காலமும் இல்லை. உடலும் மனமும் சோர்ந்து, மீண்டும் அழுகை மட்டும் பீறிட்டது. என்னிடம் கைத்தொலைபேசியும், அவசர கால உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை வாகன எண்ணும் இருந்தது. ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு தான் வாகன விபத்து ஒன்று நிகழ்ந்து இருவரை குற்றுயிரும் குலை உயிருமாய் அந்த வாகனம் அழைத்து செல்வதை பார்த்து பச்சாதாபப்பட்டிருக்கிறேன்.

இந்த நிலை நான் ஏற்கனவே வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். அப்போது நானிருந்தோ பார்வையாளர் வரிசையில்... இப்போது நான் பாதிக்கப்பபட்டன் இடத்தில்... தென்காசியில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு வாடகை வேனில் வந்த சில கல்லூரி மாணவர்கள் மரத்தில் மோதி சிதறி கிடந்த போது, ஒரு சராசரி பத்திரிகையாளனாக சம்பவ இடத்தில் இருந்த எங்கள் முன்பு ஒரு பெண் உயிர்வலியுடன் கெஞ்சியது இன்னமும் ஞாபத்தில் தான் இருக்கிறது. அப்போது நான் நினைத்திருந்தால் எனது வாகனத்திலேயே (மோட்டார் பைக்) இன்னொருவர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்க முடியும். ஆனால் அது சாத்தியமில்லை. சமூகமோ, ஒரு வயதுக்கு வந்த பெண்ணை இளைஞன் ஒருவன் மோட்டார் பைக்கில் அழைத்து செல்ல அனுமதிக்கவும் செய்யாது. சட்டமோ என்னை சாட்சிக்கூண்டில் நிறுத்தும்.

சட்டத்துக்கும், சமூகத்துக்கும் நான் பயப்படவில்லை என்றாலும், அடுத்தமாதம் நான் சம்பளம் வாங்காவிட்டால் என் குடும்பம் பட்டினியில் வாடும். எனக்கு இளையவர்கள் அப்போது தான் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்து கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்காக என்னால் பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் நேற்று நிகழ்ந்த சோகம் வேறு... மற்றவர்களின் பரிதாபங்களுக்கு மத்தியில் நான் உழன்று கொண்டிருந்தேன். கடவுளை அழைப்பதை தவிர வேறு உதவிக்கு யாருமில்லை. முருகா என்று உதடுகள் பலமுறை உச்சரித்துக்கொண்டிருந்தது. ( எனக்கு மேற்பட்ட சக்திக்கு நான் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறேன் ) அந்த சக்தி செய்த மாயம் தான் என்னவோ, தூரத்தில் காய்கனி மூட்டை ஏற்றி சென்ற மினி வேன் ஒன்று எங்களை விட்டு நகர்ந்து சில அடிதூரம் பின்னோக்கி சென்று மீண்டும் எங்களை நோக்கி வந்தது. இறங்கிய டிரைவர், தாத்தா என்று அழைத்தபடியே ஓடி வந்தான். அவன் எனக்கு தூரத்து உறவு. அதிக பரிட்சயமும் இல்லை. ஆனால் அவன் தந்தைக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நாங்கள் இருக்கும் காம்ப்பளக்சில் வேலை வாங்கி தந்திருந்தார் என் அப்பா.

இறங்கியவன், நேராக ஓடிவந்து என் தந்தையை தூக்கினான். அந்த பலம் எப்படி அவனுக்கு வந்தது என்றே தெரியவில்லை. நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தூக்கி அவனது வாகனத்தில் அப்பாவை ஏற்றினேன். உணர்விழந்த நிலையில், அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. முன்புற இருக்கையில் அப்பாவை படுக்க வைத்த நிலையில், ஏறுங்கன்னே... நம்மூர் ஆஸ்பத்திரியில் பார்க்க முடியலைன்னா, தென்காசிக்கு அழைத்து போகலாம். நானே வரேன்... என்றான். வாகனத்தின் பின்புறம் காய்கனிகள் அருகில் கிராமத்தில் இறக்க வேண்டியவை. நாங்கள் செல்வது எதிர் திசையில்,, இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி செய்யும் வரையிலாவது அந்த தெய்வம் (டிரைவர்) துணைக்கு வந்தால் போதும் என்று நினைத்தேன். ஏறும் போதே அவன் சொன்னது நியாபகம் இருந்தது. எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வோம். தாத்தாவை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுக்குள் இருந்த வேகத்தை காட்டியது. சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்பாவுக்கு நினைவு திரும்பியது. கடுமையான காயங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலிக்கு ரெபர் செய்தார்கள். நான் தென்காசியிலேயே அனைத்து சிகிச்சைகளையும் தனியார் மருத்துவனையிலேயே செய்தேன். மாலையில் அப்பா பூரண குணமடைந்தார். சுமைந்தி்ல் வந்து உயிர் காத்த தெய்வமாக நான் கருதிய அவன் மருத்துவ மனை சிகிச்சை முடியும் வரையில் உடனிருந்தான். தென்காசிக்கு அழைத்து செல்வதற்காக இன்னொரு வாகனத்தை.. ஏற்பாடு செய்து நாங்கள் சென்ற பின்பு தான் அவன் தனது வழக்கமான பணியை செய்ய சென்றான்.

இரவில் நெடுநேரம் எனக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டது. சட்டம் தன் கடமைகளை சரிவர செய்து வருகிறதா... அல்லது சட்டத்தை காரணம் காட்டி ஓட்டுனர்கள் தான் மனிதாபிமானத்தை தொலைத்து விட்டார்களா...

எல்லா ஓட்டுனர்களையும் சாட்சி கூண்டில் ஏற்றுவார்கள் என்றால் சுமையுந்தை ஓட்டிவந்தவன் உதவியதை எப்படி எடுத்துக்கொள்வது.... சட்டத்தின் சந்துபொந்துகளில் விரல்விட்டு ஏய்க்கும் வித்தை தெரிந்த இவர்களுக்கு மனிதாபிமான உதவி செய்யும் போது மட்டும் சட்டம் தடுக்கிறதா... தமக்கான சோகம் நிகழும் போதுதான் உயிரின் மதிப்பு எல்லோருக்கும் தெரியுமா...

கேள்விகள் நிறைய நெஞ்சை துளைக்கின்றன.. நீங்கள் இதை படிக்க நேர்ந்தால் பின்னோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, April 13, 2010

பார்ப்பனன் - பிள்ளைவாழ் - நாடார் - அப்பாவி - அங்காடி தெரு

நல்ல சினிமாக்களை மட்டுமே காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். மற்ற சினிமாக்களை எப்படியாவது எப்போதாவது பார்க்க நேரிடலாம் அது தனிக்கதை.

வெயில் படத்தை ராஜபாளையத்தில் பார்த்து விட்டு வரும்போது, வலிக்கும் மனதுடன் தான் வெளியே வந்தேன். அந்த படத்தின் இறுதியில் தனது மூத்த மகனுக்காக நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் ஒரு சராசரி தகப்பனை இன்னமும் கூட நான் மறக்கவில்லை.

மனதோடு பேசும் படங்கள் எப்போதாவது தான் தமிழ் திரைக்கு வருகிறது. அந்த வரிசையில் என்னை கொள்ளை கொண்ட படம் அங்காடி தெரு. ரங்கநாதன் தெருவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனென்றால் சென்னையில் ரங்கநாதன் தெருவை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அடிமை வேலை என்றால் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 10வது படித்துக்கொண்டிருக்கும் போது மும்பைக்கு 500 ரூபாயோடு சம்பாதிக்கும் கனவோடு திருநெல்வேலியில் இருந்து பயணத்தவன் நான். வள்ளியூர் பக்கம் உள்ள நாடார் ஒருவரின் கடையில் வேலை செய்து அவர் படுத்திய பாட்டை நான் சொல்லி மாளாது. வீட்டிலும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் வந்து அகப்பட்டு கொண்டவர்களை கசக்கி பிழியும் ஒரு கொடூரராகத்தான் அவர் தெரிந்தார்.

நாள் முழுக்க பீடா கடையில் வேலை... காலையில் 4.30க்கு கடைவிரிப்பார்கள். மும்பை சர்ச் கேட் பகுதியில் அதிகாலையிலேயை அலுவலக நேரம் மாதிரி கூட்டம் இருக்கும். பெருநகரத்தின் சலசலப்புக்கள், இரவின் நிசப்தத்தை அப்போது தான் குலைத்துக்கொண்டிருக்கும்.

இரவில் தூங்குவதற்கு நிச்சயமாய் 1 மணிக்கு மேலாகலாம். அதில் வேறு கொடுமை என்னவேன்றால் நான் அகப்பட்டுக்கொண்ட நேரத்தில் வடகிழக்கு பருவ மழை வேறு தன் குரூரத்தை காட்டிக்கொண்டிருக்கும். இரண்டு பீடாக்கடைகளை ஒருசேர்த்து கட்டி அதன் மேல் சின்னதாய் தார்பாயில் ஒரு கூடாரம் மாதிரி அமைத்துக்கொண்டு படுக்க வேண்டும். மழையில் எங்கிருந்தோ, தொபு... தொபுவென்று தண்ணீர் மூஞ்சியில் வந்து விழும், அப்போது தான் தெரியும் மழையின் கோரதாண்டம் பற்றி.

மழை 5 வது வகுப்பு படிக்கும் வரையிலும் எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், மும்பையில் இருக்கும் வரையில் மழையை பார்த்தாலை கிலி எடுக்கும். கால் கடுக்க வெற்றிலையில் ஏதோ சில கருமாந்திரங்களை தடவிக்கொடுக்க சொல்லுவான் அந்த முதலாளி. நானும் ஆய்க்குடி அருகே இருந்து என்னோடு ஓடி வந்த அந்த நண்பனும் வேலையை செய்து கொண்டிருப்போம்.

அப்போது, சிகரெட் என்ன விலை என்று கூட எனக்கு தெரியாது. பள்ளிக்கூடம் படிக்கும் போது, 1.50 காசிற்கு விற்ற கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் ரேட் மட்டும் தான் பரீட்சயமானது. ஏனென்றால், திருட்டு தம் கொடுத்த அனுபவத்தால் வந்தது. ஆனால் கிராமங்களை போல் இல்லாமல் அங்கோ, விதவிதமாய் சிகரெட்டுக்கள், lights, banama filter... பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவைகளின் விலைகள் கூட சரி வர புரிந்து கொள்ள முடியால் போனது. இதற்காக கூட அவரின் வார்த்தை கணைகளை வாங்கி குவித்திருக்கிறேன் பலமுறை.

3 பை 1 டீயை வாங்கி கொடுத்து மத்தியான சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாமல் செய்திருக்கிறார். 4 மணிக்கு மேல் அவர்கள் வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை தொண்டைக்குழிக்குள் இறக்குவதே கடினம். காலையில் இருந்து இரவு வரையில் உட்காருவது என்பதை யோசிக்க கூட முடியாது. இயந்திரத்தனத்துக்கு இடையில் பரபரப்பான அந்த வாழ்க்கையில் அடுத்தவனுக்காக சம்பாதித்து போடுகிறோம் என்ற உணர்வு வந்த போது உடல் நிலை வேறு பாடாய் படுத்தியது. சாக்கடை கொசுக்களுக்கு ஊடாக படுத்து எந்திரிந்ததில் வயிற்றுப்போக்கு, மராட்டிய முரசு பத்திரிகை போடும் பையனுக்கு எங்க ஏரியா, அவன் தான் வீதியில் கிறங்கி விழுந்த என்னை பத்திரமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனான். அவன் செலவழித்த 246 ரூபாயை நான் வரும் வரையில் அவன் திருப்பி வாங்கவில்லை என்பது வேறு கதை.

என்னை வைத்து எவ்வளவு சம்பாதித்திருப்பார் அந்த முதலாளி... ஊருக்கு போவதாய் சொன்னபோது, கணக்கு பார்த்து கரெக்டாய் பணம் கொடுத்து அனுப்பினார்.

சரி அங்காடி தெருவிற்கு வருகிறேன். இந்த படம் எனது பழைய காயங்களுக்கு மருந்து போட்ட உணர்வு. தென்மாவட்ட நடுத்தர குடும்பத்தினரை குறிவைத்து ரத்தம் குடிக்கும் பிசாசுகளாக, நாடார் இனத்தின் தொழிலதிபர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

நாடார் இனத்தை பற்றி அனுபவம் மிக்கவர்கள் சிலர் சொல்லும் போது, தன் இன மக்களை கரம் தூக்கி விடும் பக்குவம் அவர்களிடம் உண்டு என்பதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தஸ்து உயர்ந்ததுதும், இனத்தை பார்ப்பதில்லை.

நாடார் இனத்தில் பத்திரிகை நடத்தும் ஒரு கொடை வள்ளல், அலுவலகத்திற்கு எப்போதாவது வரும் போது, தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் பணத்தை கைவிட்டு எடுத்து எத்தனை ரூபாய் தாள்கள் வந்தாலும் தொழிலாளிக்கு கொடுப்பாராம். இதை பெருமையாய் எனது நண்பன் சொன்னான். நான் கேட்டேன். புரூப்பில் இருந்து செய்தி பிரிவுக்கு வந்திருக்கும் உனக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் உங்கள் முதலாளி? நடந்தே வருகிறாயே அலுவலகத்தில் இருசக்கர வாகனம் வாங்க லோன் போட வேண்டியது தானே... வள்ளல் முதலாளி அள்ளித்தருவாரே.. என்றேன். மூவாயிரம் வாங்கும் நான் லோன் வாங்கினால் அடைப்பது யாராம்... என்றான் நண்பன்.

ரங்கநாதன் தெரு கொத்தடிமை தனம் தான் பத்திரிகை துறையிலும். வளரும் வரையில் முதலாளியின் கண்களுக்கு தொழிலாளி தெரிவான். அப்புறம் முதலாளி சொன்னதாய் செவிவழி செய்திகள் மட்டுமே தொழிலாளிக்கு கேட்கும். தனியார் துறையின் கொத்தடிமை தனங்களுக்கு, பிள்ளைவாழ், பார்ப்பான், நாடார் என்ற சாதி வித்யாசம் என்பது துளியும் இல்லை.

இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பங்கிட்டு கொடுக்க சொல்லி எந்த தொழிலாளியும் கேட்பதில்லை. ஆனாலும் மற்றவர்களை போல தனி மனித சுதந்தரம் ஒன்றை தான் ஒவ்வொரு தொழிலாளியும் விரும்புகிறான்.

எதையாவது செய்து, முதலாளியின் கோபத்திற்கு ஆளாகி வேலையை விட்டே வெளியேறும் தொழிலாளியின் சாபம் ஒன்றும் முதலாளியை ஆண்டி ஆக்கி விட போவதில்லை.

விற்க தெரிந்தவன் வியாபாரி.. எதையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள தெரிந்தவன், துரதிஷ்டம் துரத்தினாலும் என்றாவது முன்னேறுவான்.

நான் பணி புரிந்த பத்திரிகையில் இருந்து வெளியேறிய போது வானம் இருண்டு போனதாய் தெரிந்தது கண்களுக்கு... இப்போது கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு மேல் என்னிடம் தொழில் நுட்ப கருவிகள் இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழவில்லை.

இன்னும் சில வருடங்களில் நானும் ஒரு முதலாளியாகவும் மாறலாம். அப்போது இதே போல ஒரு தொழிலாளியோ... இன்னும் சிலரோ கூட தூற்றி எழுத நேரிடலாம்....

பணம்!
எல்லாவற்றையும் மாற்றும் மந்திர சொல் தானே...