தமிழகத்தில் சாதிக்கட்சிகள் எத்தனை துவங்கினாலும் கூட மக்களின் பார்வை என்னவே வைட்டமின் "ப" மிகுதியாக இருக்கும் கட்சிகள் மத்தியில் தான் இருக்கும். தமிழக ஜனநாயகம் கேலிக்கூத்தாய், நடிகர்கள்... ஜாதிய தலைவர்கள் பின்னால் போய் கொண்டிருப்பதை மாற்றமுடியாத அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.
ஜாதி கட்சி அரசியல் என்பது பதவி சுகத்திற்கானது இல்லை என்ற போதிலும் தனிப்பட்ட ஜாதிய தலைவர்களின் பின்புலத்திற்கு நிச்சயமாய் பயன்படத்தான் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதலியார் என்ற அனைத்து வகுப்பினரையும் ஒன்று திரட்டி ஆரம்பிக்கப்பட்ட புதிய நீதிக்கட்சி இப்போது இருக்கிறதா என்ற தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் பிரபலமான அதன் தலைவர் ஏசி சண்முகம் நல்ல முறையில் செட்டில் ஆகி இருக்கிறார்.
இதே போல தமிழ்நாடு வன்னியர் சங்கங்களின் பேரவையில் இருந்து தான் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியது. இக்கட்சி புதுச்சேரி, வடஆற்காடு, தென்னாற்காடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தென்மாவட்டங்களில் வன்னிய சமுதாய கட்சியாகவே மக்கள் பார்க்கிறார்கள். இதன் பல தலைவர்கள் இன்று தனிப்பெறும்பான்மையோடு ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும், தங்களின் பேக்ரவுண்டை நன்றாகவே பெருக்கிக்கொண்டார்கள்.
நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சில சங்கங்களை இணைத்து நடிகர் சரத்குமார் உருவாக்கிய சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை நாடார்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாடார் சமுதாய மக்களை தன் கூட்டத்திற்காக திரட்டுகிறார் சரத்குமார். இவர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் சமீபத்தில் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 500 வாக்குகள் கூட பெற முடியவில்லை. இதே போன்று யாதவர்களுக்காக கட்சி துவங்கிய கண்ணப்பன் கதை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
நடிகர் கார்த்திக் ஜாதிய அரசியலை நம்பி களத்தில் குதித்து பல லட்சங்களை இழந்தார் என்பது தேவர் சமுதாயத்தில் உள்ள அவரது நண்பர்களுக்கு தெரியும். இன்றும் கூட ஜாதிக்காக ஒரு கட்சியை துவங்கி அதில் தென்மாவட்டத்தை சேர்ந்த எனதருமை நண்பர் எஸ்.ஜே.சூர்யாவை பலிகடாவாக்க ஒரு கூட்டம் துடித்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஜாதிய ரீதியில் சென்ற இயக்கங்கள் இப்போது... இந்த பாதை தவறானது என ஜனநாயகத்திற்கு திரும்புகின்றன. உதாரணமாக சொல்வதென்றால் திருமாவின் விடுதலை சிறுத்தைகள், பாமகவில் இப்போது குறிப்பிட்ட சமுதாயத்தினரை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் தென்மாவட்டக்காரராக இருந்தால் இந்த கட்சிகளில் நீங்களும் கூட பதவி வாங்க முடியும்.
நிலைமை இப்படி இருக்க ஜாதிய ரீதியில் இன்றளவும் கட்சிகள் தோன்றுவது வாடிக்கையாகி விட்டது. நேற்றைக்கு கொங்கு வேளாளர் சமுதாயத்தில் இருந்து ஒரு கட்சி உதயமாகியுள்ளது. இதே போன்று நாளையும் பல கட்சிகள் உருவாகலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. சிலர் தனது சொத்துக்களை பாதுகாக்க ஜாதிய கட்சிகளை துவக்குகிறார்கள். அல்லது முதல்வர், அமைச்சர் கனவோடு துவக்குகிறார்கள். இதில் முன்னவர்கள் ஜெயிக்கிறார்கள். பின்னவர்கள் முதல் இழந்து ஓடுகிறார்கள். கொங்கு வேளாளர்கள் எப்படியோ தெரியவில்லை.
No comments:
Post a Comment