Thursday, February 12, 2009

என் பார்வையில் அகதிகள்...

அகதி என்ற சொல்லை விட புலம்பெயர்ந்தவர்கள் என்ற வார்த்தைதான் சரியான பதம் என்று எனக்கு தோன்றுகிறது.

அகதி என்பது தான் இன்றளவும் அரசாங்கத்தால் இவர்களுக்கு வழங்கப்படும் முத்திரை. தமிழகத்தை பொறுத்தவரையில் 117 அகதிகள் முகாம்களில் சுமார் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த எம் தமிழ்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலக வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான மக்கள் நீண்டகாலம் தன் சொந்த நாட்டுக்கு திரும்பாத நிலை இலங்கை அகதிக்கு மட்டுமே உண்டு.

அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களின் மூலம் இந்தியாவிற்கு (India) பல நாடுகளில் இருந்து வருகின்றனர். குறிப்பாக இலங்கையை தவிர்த்து மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்த சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தாலும் இவர்களை இந்திய அரசு கண்ணியம் தவறாமல் நடத்துகிறது.

ஆனால் இலங்கையை (srilanka) பொறுத்தவரையில் தமிழ்மக்கள் இந்திய குடியுறிமையும் இல்லாமல் இலங்கை குடியுரிமையும் இன்றி தவித்த காலகட்டங்கள் உண்டு. வாக்களிக்க அதிகாரமின்றி வாழ்ந்த மலையக தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை தனது மக்களாக பாவிக்காமல் இலங்கை அகதிகள் என்றே இனம்காட்டியது இந்திய அரசு. இவர்களுக்காக திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் அகதிகள் முகாம்களை அமைத்தும் கொடுத்தது.

தமிழகத்தில் (Tamilnadu) உள்ள பொரும்பாலான அகதிகள் முகாம்கள் சில காலம் வரையில் சரியான மின்வசதி, அடிப்படை வசதிகள் இல்லாமையால் சேரி போன்றே தோற்றமளித்தன. எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அப்பாவி இலங்கை தமிழர்களுக்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளை தமிழக மக்களிடம் இருந்து பெற்று அகதி முகாம்களில் உள்ள தமிழ்மக்களிடம் வழங்கிய தன்னார்வு அமைப்புக்களை பார்த்திருக்கிறேன்.

அகதி முகாம்களின் மீது தமிழக போலீசாருக்கு (Police) எப்போதுமே ஒரு சந்தேக கண் இருந்து வருகிறது. பல திருட்டு வழக்குகளுக்காக அப்பாவி தமிழர்களை பொலிசார் சித்திரவதை செய்திருப்பதை கண்ணால் பார்த்திருக்கிறேன். அகதி தானே... இவண் மேல 307 பார்ட் 2 கேச போடுய்யா... என்று என் கண்முன்னால் கதைத்த போலீஸ் அதிகாரிகளும் உண்டு.

அகதி என்ற காரணத்திற்காக பூர்வீக நாட்டில் எந்த உரிமையையும் கேட்க முடியாத அவலம் இந்தியர்களுக்கு மட்டுமே உண்டு. அடிமாடுகளை போன்று இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் இவர்களின் நிலை என்று தான் மாற போகிறதோ... இந்த சாபத்தை நீக்க எந்த ராமன் வரப்போகிறானோ

No comments: