Friday, June 25, 2010

தமிழுக்கு இட்லி வடை பாயாசமா.... செம்மொழி மாநாடு சிறப்பு பார்வை

கோவை...

கொஞ்சு தமிழாம் கோவைத்தமிழ் மரியாதை மிக்கது. ஏனுங்கோ.. வாங்கோ.. போங்கோ... என்று மரியாதை மிக்க வார்த்தகளை கொண்ட இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் (!) விதமாக அமைந்திருக்கிறது கோவை தமிழ் செம்மொழி மாநாடு.

இலங்கையில் தமிழர்கள் அநாதைகளாக்கப்பட்ட சூழலில் இந்த மாநாடு தேவை தானா என்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா ஆதங்கப்படுகிறார். இதில் அரசியல் நோக்கம் இருக்கிறதா... இல்லையா என்பது இணையத்தை படித்து பார்க்கும் உங்களுக்கு தெரியாதா...

ஆயினும் ஒரு விஷயத்தை மட்டும் பார்க்க வேண்டும். திசை திருப்புதல் என்ற ஒரு மந்திரத்தை எல்லா அரசியல் வாதிகள் பயன் படுத்தினாலும் கூட மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மக்களின் மனதை திசை திருப்பி விடுவது எளிதான செயல். முச்சந்தியில் நிற்கும் ஒரு சராசரியான போக்குவரத்து காவலரை போல இந்த பணியை எல்லா காலகட்டத்திலுமே சிறப்பாக செய்து வருகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சீமான் உட்பட பலரும் போராட்டம் நடத்துகையில், தமிழின படுகொலைகளை தனது கட்சியும் கண்டிப்பதாக காட்டிக்கொண்டார் தமிழக முதல்வர். ஆயினும் இந்த வடுக்கள் மக்களின் மனதில் பதியாமல் போனதற்கு மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாகி விட்டதா என்று தெரியவில்லை.

தமிழின துரோகம், தமிழின படுகொலை உள்ளிட்ட வார்த்தைகள் செய்தித்தாள்களில் இருந்து களையெடுக்கப்படும் அளவிற்கு, செம்மொழி மாநாட்டு செய்திகள் நிரம்பி விட்டன. அன்னிய தேசத்து பெண்டிர் பேசும் அழகு தமிழை டிவியில் பார்த்தும் கேட்டும் உள்ளம் பூரிக்கிறான் தமிழன். 30 ரூபாய்க்கு போடும் சோற்றை வாயாற புகழ்கிறான். எல்லாம் சரிதான்... ஒரு தமிழ் தேசத்தை உருவாக்க போராடியவர்களின் புதை குழியின் ஈரம் காய்த்து விட்டதா... என்று சிவத்தம்பியும்... மதிப்பிற்குரிய தமிழக முதல்வர்களும் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை.

வதை முகாம் தானே மாறிப்போனது... வதை படும் தமிழனுக்கு வசிக்க இடம் இருக்கிறதா... என்ற எந்த தமிழனாவது எண்ணி பார்த்தானா என்பது தெரிவில்லை. ரோமாபுரி எரியும் போது பிடில் வாசித்த மன்னனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே சுதந்தரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு வர்க்கத்தீயின் மத்தியில் புலவர்களின் புகழுரையிலும், நாட்டிய நடன களிப்பிலும் மூழ்கி விட்டார் தமிழக முதல்வர்.


இந்த செம்மொழி மாநாடு, ரோட்டோர பெட்டிக்கடைக்காரனை தமிழ் வித்தகன் ஆக்க போகிறதா... இணையத்தில் தமிழை மதிப்பு மிகு மொழியாக மாற்றப்போகிறதா... என்பது தெரியவில்லை.

வண்ணத்தொலைக்காட்சி... சமையல் எரிவாயு... இலவச நிலம் வரிசையில் தமிழ் செம்மொழி மாநாடும் யாரோ சிலருக்கு லாபம் கொடுக்கலாம். அந்த பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா என்பது தான் தெரியவில்லை.

No comments: