தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நமது தொப்புள்கொடி உறவுகளுக்காக ஆற்றிய உரையின் தலைப்பு இது.
இந்த உரையிலும் அவரால் தனித்தன்மையுடன் உரையாற்ற முடியாத அளவிற்கு அதிமுக சொல்வதை போன்று மைனாரிட்டி அரசுக்குரிய ஒரு பலவீனமான காய்நகர்த்துதலே தோன்றுகிறது.
அவரது உரையில் .... இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் உள்ள தனது மக்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்கள் படும் துயரங்களையும், இழிவையும் மறப்பதில்லை.ஒரு நாள் வரும்... அன்று இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும். அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும். என்றார்.
அந்த நாள் எப்போது வரும் என்பதை தான் கோடிக்கணக்கான தமிழர்கள் கேட்கிறார்கள். ஆட்சியா? தமிழின உணர்வா? என்று தராசு தட்டில் எடை போட்டால் எந்த திராவிட கட்சியிலும் தமிழின உணர்வு வெயிட்டாக இருக்காது. அதே நிலை தான் இன்று திமுகவிற்கும். இந்தியா பலவீனமாக இருக்கிறதோ என்னவோ திமுகவின் சட்டமன்ற பலம் குறைவாகவே இருப்பதை தான் முதல்வர் இப்படி சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று தோன்றுகிறது.
அதிமுகவின் நாடகம்
ஒரு நாடகத்திற்கு துணை போக முடியாது என்று எதிர்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கும் கருத்தும் கூட ஏற்புடையதல்ல. ஆளுங்கட்சிக்கு எதிராகவே இருக்க வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக தமிழ் இன உணர்வுகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பேசும் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறப்புக்களும் இந்த வார்த்தையை உபயோகிக்க தகுதியற்றவர்களே...
திருமாவின் ஒரு கை ஓசை மட்டும் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. பா.ம.கவும் தமிழ் பற்றுள்ள அமைப்புக்களும் எடுக்கும் எந்த நடவடிக்கையும் மத்திய அரசின் காதுகளை சென்றடைய போவதில்லை.
தீர்க்கமான ஒரு முடிவாக ஒட்டுமொத்த தமிழகமும் தன்வீடு பற்றி எரிவதை சிந்தித்து, நெருப்பு நரிகளின் கொட்டத்தை அடக்க களமிறங்க வேண்டும். அதுவரையில் இலங்கையில் தமிழன் சிந்தும் ரத்தத்தை நிறுத்த முடியாது.
No comments:
Post a Comment